புதுடெல்லி: ஜார்க்கண்ட் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான பணி நியமன ஆணையை அதிபர் திரவுபதி முர்மு நேற்று (சனிக்கிழமை) வழங்கினார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தின் புதிய ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் பொறுப்பாளராகவும் செயல்படுவார். ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிக்கிம் மாநில ஆளுநராக ஓம் பிரகாஷ், ஜார்கண்ட் மாநில ஆளுநராக சந்தோஷ் குமார் கங்வார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் டேகாவும், மேகாலயா ஆளுநராக சி.எச்.விஜயசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தெலுங்கானா மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னராகவும் இருந்தார். தற்போது, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அசாம் மாநில ஆளுநராக லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மணிப்பூர் கவர்னராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆளுநர்களின் நியமனம் அவர்கள் பதவியேற்ற நாள் முதல் அமலுக்கு வரும்.