வாஷிங்டன்: “சீனாவை எதிர்க்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தயவும், உறவும் மிகவும் அவசியம்” என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடியரசுக் கட்சி தலைவி நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 25% சுங்கவரி மற்றும் 25% அபராத வரி விதித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பல அமெரிக்க அரசியல் தலைவர்களும் டிரம்பின் முடிவை விமர்சித்துள்ளனர்.

அவர்களில் ஒருவரான நிக்கி ஹாலே, “இந்தியா உடனான டிரம்ப் நிர்வாகத்தின் உறவு மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. சீனாவை சமாளிக்க, அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஆதரவு அவசியம். இந்தியா, டிரம்பின் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், இரு நாடுகளும் இணைந்து ஒரு தீர்வு காண வேண்டும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
- “இந்தியா, சீனாவைப் போல ஒரு எதிரி அல்ல.
- டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவு இலக்குகளை அடைய, அமெரிக்கா–இந்தியா உறவை வலுப்படுத்த வேண்டும்.
- ஜவுளி, மலிவான தொலைபேசிகள், சோலார் பேனல்கள் போன்ற உற்பத்தி துறைகளில் இந்தியா மிகுந்த திறன் பெற்றுள்ளது.
- இந்தியாவின் வளர்ச்சி, சீனாவின் தாக்கத்தை குறைக்கும்.”
டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நிக்கி ஹாலே, முன்னாள் ஐ.நா. தூதராக பணியாற்றியவர். அவரின் இந்த கருத்து, அமெரிக்கா–இந்தியா உறவில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.