சென்னை: மல்லிகை பூ என்றாலே உடனே அதன் வாசனைதான் நினைவுக்கு வரும். ஆனால் மல்லிகை பூ மிகவும் அபூர்வமானது. மருத்துவக்குணங்கள் நிறைந்தது.
அனைத்து பெண்கள் ரொம்பவே விரும்புவது மல்லிகை பூதான். சாதாரண அழகியையும் பேரழகியாக காட்டிவிடும் மல்லைகைப்பூ என்றால் மிகையில்லை. விசேஷ வீட்டில் ஆரம்பித்து கோயில்களில் சுவாமிக்கு அலங்காரம் செய்வது வரை மல்லிகைப்பூவுக்கு தனியிடம் உண்டு.
மேலும் இது பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டது. மல்லிகை உடலுக்கும், மனதுக்கும் மிகவும் புத்துணர்ச்சி தர கூடியது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள. இதனால்தான் திருமணம் முடிந்து முதல் இரவில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட மல்லிகைப்பூவா அலங்காரம் செய்கின்றனர். இதன் வாசனை உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இதனால்தான் முதலிரவில் முதலிடம் பிடிக்கிறது மல்லிகை.
மல்லிகை பூ பொதுவாக இரவில்தான் பூக்கும். மிகவும் நறுமணம் கொண்டது. மூளையின் கீழ் பகுதியில் உருவாகும் வெப்பத்தை குறைத்து தலை குளிர்ச்சியடைய செய்யும் ஆற்றல் கொண்டது மல்லிகை பூ. உறவுகளுக்குள் நேசத்தையும் அதிகரிக்கும்.
மல்லிகை பூ இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி, ஒரு துணியில் கட்டி, வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். இது சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். இதைவிட மிக முக்கியமான ஒன்று என்ன தெரியுங்களா? சில பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
அந்தமாதிரியான பெண்கள் ஒரு கையளவு மல்லிகை பூவை மார்பகத்தில் வைத்து கட்டும் போது தாய்ப்பால் அதிகம் சுரப்பது குறையும். நல்லெண்ணெயுடன் சிறிது மல்லிகைப் பூ எண்ணெய் சேர்த்து, உடலில் மசாஜ் செய்தால் உடல்வலி நீங்கும். குளிர்ச்சி அடையும்.
மல்லிகை எண்ணெய் உடலில் தேமல் வராமல் தடுக்கும். நீர்ச்சத்தை அதிகரித்து முகம் பொலிவு பெறச் செய்யும். இப்படி அசாத்திய மருத்துவக்குணங்கள் கொண்ட மல்லிகையின் வாசனை சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. காரணம் மல்லிகையில் உள்ள எண்ணெய்.