கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நீதிபதி காட்டமாக கருத்து வெளியிட்டார். கரூரில் நடிகர் விஜய் தலைமையில் நடந்த தவெக கட்சியின் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர். இதுகுறித்து பல வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், அரசியல் கூட்டங்களுக்கு விதிமுறைகள் வகுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, நீதிபதி, “விஜய் வந்த வாகனம் இரண்டு வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? Hit and Run வழக்கே போட வேண்டியதல்லவா? வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டியதல்லவா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “இவ்வளவு பெரிய விபத்தில் இதுவரை இருவரை மட்டுமே கைது செய்திருக்கிறார்கள். காவல்துறை கண்களை மூடி கொள்ளக் கூடாது” என கண்டனம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், நீதிபதி கடுமையாக சுட்டிக்காட்டியதாவது, “நிகழ்ச்சி நடந்த இடத்தில் தொண்டர்களை, ரசிகர்களை, மக்களை தலைவரே கைவிட்டு வெளியேறி விட்டார். தலைமைப் பொறுப்பு என்ற ஒன்றே அவரிடம் இல்லை. உலகமே பார்த்தது போல, இந்த சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man-made disaster)” எனக் குறிப்பிட்டார்.
அரசு தரப்பும் வாதிப்பதற்காக நீதிமன்றத்தில் தெரிவித்தது, கரூர் பிரச்சாரத்திற்கு பல விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருந்தும், தவெக கட்சி அதில் இரு நிபந்தனைகளையே பூர்த்தி செய்தது. மீதியனைத்தும் மீறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, “என்ன மாதிரியான கட்சி இது? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவெகக்கு என்ன தடை இருந்தது?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.