அமெரிக்கா: அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற 1 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8.98 கோடி ரூபாய் செலுத்தி பெறும் வகையில், ட்ரம்ப் கோல் கார்டு(தங்க அட்டை) விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு சென்று வேலை பார்ப்பதற்காக பல வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமானது எச்1பி விசா. இந்த விசாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்த விசாவை பெற்று அங்கு சென்று வேலை பார்ப்பவர்களுக்கு, அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்காக, பல வருடங்களுக்குப் பின் ‘கிரீன் கார்டு’ என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் வேலை பார்க்கவும், அங்கு வசிக்கவும், ‘கோல்டு கார்டு‘ விசாவை அறிமுகப்படுத்தியுள்ளார் அதிபர் ட்ரம்ப். இதற்காக என்ன செய்ய வேண்டும், எப்படி விண்ணப்பிப்பது.? பார்க்கலாம்.
வெளிநாட்டினர் அமெரிக்காவிற்கு சென்று வேலை பார்ப்பதற்கும், அங்கேயே நிரந்தரமாக தங்கம் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள ‘கோல்டு கார்டு‘ விசாவை, அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிமுகம் செய்துள்ளார். இதை பெறுவதற்காக, அமெரிக்க அரசிற்கு 1 மில்லியன் டாலர்கள், அதாவது தற்போதைய இந்திய மதிப்பில் சுமார் 8.98 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும். அவ்வாறு பணம் செலுத்துவதன் மூலம் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கும் அந்தஸ்தைப் பெற இந்த கோல்டு கார்டு அனுமதிக்கிறது.
இந்த விசா கிரீன் கார்டை போன்றது தான் என்றாலும், அதைவிட பெரிய நன்மைகளை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும், அமெரிக்க அரசாங்கத்திற்கே செல்லும் என்றும், அதன்மூலம் நாட்டிற்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்ய முடியும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், இந்தத் திட்டம், பெரும் நிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற திறமையாளர்களை பணியமர்த்தி, அவர்களை தக்கவைத்துக் கொள்ள உதவும்” என்றும் தெரிவித்தார்.
இந்த கோல்டு கார்டு-க்கான விண்ணப்பங்கள் https://trumpcard.gov/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த இணைய முகவரிக்கு சென்று அங்கு கேட்கப்பட்டுள்ள தரவுகளை சமர்ப்பித்து இந்த கோல்டு கார்டு-க்கு விண்ணப்பிக்கலாம்.