சென்னை: தமிழகத்தில் நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை (ஜூன் 12) கனமழை பெய்ய
வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூன் 12) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் கோவை, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
13-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்திலும், 14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்திலும், புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 15 முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.