தஞ்சாவூர்: ரசிகர்களின் அமோக ஆதரவை பார்க்கும் போது மனம் நிறைந்துவிட்டது என்று தஞ்சாவூர் ஸ்ரீபதி திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள மாயபிம்பம் படத்தினை ரசிகர்களுடன் சேர்ந்து அதன் இயக்குனர் கே ஜே சுரேந்தர் கண்டுகளித்த பின்னர் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் செயல்பட்டு வருகிறது ஸ்ரீபதி திரையரங்கம். இங்கு மாய பிம்பம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளதால் இரண்டாவது வாரமாக சக்சஸ்புல்லாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ரசிகர்களுடன் சேர்ந்து இப்படத்தின் இயக்குனர் கே.ஜே. சுரேந்தர் கண்டுகளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக உள்ளது. காமெடி, குடும்ப சென்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது. படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாம் பாராட்டுக்குரியதாக வருவதால் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்த்து மகிழ்கின்றனர்.
ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் இந்த படத்தை பாக்கணும்னு ஆசைப்படுற அனைவரும் கண்டிப்பாக தியேட்டர்ல வந்து பாருங்கள். ஓடிடி-க்காக வெயிட் பண்ணாம தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் என்று நான் ரசிகர்களிடம் கோரிக்கையாக கேட்டுக்கொள்கிறேன். படத்தில் வரும் அனைத்திற்கும் ரசிகர்கள் கரவொலி எழுப்புவதை கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறது.
இது முழுக்க முழுக்க லவ் பேஸ்டு ஃபிலிம்தான். ஃபேமிலி, நல்ல ஃப்ரெண்ட்ஷிப், ஃபேமிலி செண்டிமெண்ட், அதோட அழுத்தமான லவ் தான் கன்டென்ட். இப்ப இருக்கிற காலகட்டத்துல காதல் என்பது மிக வேகமாக காதலித்து பிரியும் சூழ்நிலைதான் உள்ளது. பாஸ்ட் ஃபுட் டைம் ஆயிடுச்சு. 2005-ன்றது வந்து இந்த மொபைல் போன் பெருசா வராத காலகட்டம். அப்போது காதல் என்பது அழுத்தமான இரு மனங்கள் இணைந்த விஷயமாக இருந்தது. எனக்கு ஒரு அழுத்தமான காதலை சொல்ல வேண்டும் என்பதால் 2005ம் காலகட்டத்தை தேர்வு செய்தேன்.
நான் பி.எஸ்சி அக்ரி படித்து இருந்தாலும் சிறு வயதிலிருந்து சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய விருப்பமாக இருந்து வந்தது. கனவாக இருந்தது தற்போது நனவாக மாறியுள்ளது. அதை நோக்கி நான் டிராவல் செய்தேன். அசிஸ்டென்ட் டைரக்டரா, அசோசியேட்டா நிறைய படத்துல ஒர்க் பண்ணிட்டு, இப்ப மாய பிம்பம் படத்தை இயக்கியுள்ளேன். என்னோட சொந்த ஊர் கடலூர். ஆக்சுவலா படத்தில் கடலூர் மற்றும் சிதம்பரம் தான் கதைக்களமா பயன்பட்டிருக்கு. அதோட வழக்கு எப்படி இருக்கோ, பேச்சு வழக்கு அதைத்தான் பயன்படுத்திருக்கேன். அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அடுத்தப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.
அடுத்த படம் வேல்ஸ் நிறுவனத்திற்காக ரெடி செய்து வருகிறேன். மாயபிம்பம் படத்தை பார்த்துவிட்டு வேல்ஸ் நிறுவன படத்தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் மனம் விட்டு சிரித்தேன் என்று பாராட்டினார். இதேபோல் இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் மக்களை சென்றடைந்ததால் வரவேற்பு அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து பல ஜானர்களில் கதைகள் ரெடி செய்து கொண்டு இருக்கிறேன். சிறிய படங்கள் என்று நினைக்காமல் படம் நன்றாக இருந்தால் மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்பது மாயபிம்பம் படத்திற்கு கிடைத்துள்ள வெற்றியே சாட்சியாகும். இயல்பான நடிப்பு, கதைக்களம் ஆகியவை படத்தின் வெற்றிக்கு அஸ்திவாரம் போன்று அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.