சென்னை: திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று கடைசி நாளாகும். “தமிழ்நாட்டின் முதல்வராக, நமது தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வரவேண்டும் என்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு அண்ணன் ஓபிஎஸ் வாழ்த்துகளோடு நன்றி கூறுகிறேன்” என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் சட்டப்பேரவையில் பேசியிருந்தார்.
தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “ஐந்தாண்டுகால திமுக ஆட்சி நிறைவு பெற்றிருக்கிறது; அதனால் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்” என்றார். உங்களின் ஆதரவாளர் பேரவையில் பேசிய கருத்துகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “அவருடைய வாழ்த்துகள், எண்ணம், செயல்பாடு மற்றும் தமிழக மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ அதை அவர் சொல்லியிருக்கிறார்.
பொதுவான கருத்து, இன்றைய அரசியல் சூழலில், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் செய்த சாதனைகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது” என்றார்.
தை பிறந்தாள் வழிப்பிறக்கும் என சொன்னீர்களே என்ற கேள்விக்கு, “தமிழ்நாட்டுக்கே வழி பிறந்துவிட்டது” என்றார்.மேலும், திமுகவில் இணைய உள்ளீர்களா என்ற கேள்விக்கு, “பொறுமையாக இருங்கள்” என கூறிச் சென்றார்.