திருச்சி: திமுக பட்ஜெட் ஒரு வெங்காயம் போன்றது என்று திருச்சி விமான நிலையத்தில் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக திண்டுக்கல் சீனிவாசன், திமுகவின் இடைக்கால பட்ஜெட்டை “வெங்காயம்” என விமர்சித்தார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, தேமுதிகவின் கூட்டணி மாற்றம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்துப் பேசினார்.
திமுக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், “வெங்காயத்தை உரித்தால் எப்படி உள்ளே ஒன்றும் இருக்காதோ, அதுபோலத்தான் திமுகவின் பட்ஜெட்டும் உள்ளது; அதில் உருப்படியாக எதுவும் இல்லை,” எனச் சாடினார்.
மேலும், தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தது குறித்த கேள்விக்கு, “யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறிவிட்டு, எங்கே போக வேண்டுமோ அங்கே போய்விட்டார்கள்,” எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், விஜய்யின் அரசியல் பலம் என்ன என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும்.. தேர்தலுக்காக அனைவரும் களத்தில் இருக்கும்போது, விஜய் அமெரிக்க மாடலில் மக்களைச் சந்திக்காமல் டிவியில் மட்டும் பிரச்சாரம் செய்யப்போகிறார் போலத் தெரிகிறது. அவர் என்ன ஐடியாவில் இருக்கிறார் என்பது புரியவில்லை என்றார்.