ஜம்மு காஷ்மீர்: லடாக் யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை இணைக்கும் சோஜிலா கணவாயில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தில் ஜோஜி லா பகுதியில் உள்ள சாலையில் வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த பனிச்சரிவில் பல வாகனங்கள் சிக்கி புதைந்து போயுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, உடனடியாக நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளும்படி கார்கில் நகர சிறப்பு காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து உள்ளார். பேரிடர் நிவாரண படைகள், எல்லை சாலைகள் அமைப்பு உள்ளிட்ட அனைத்து அரசு அமைப்புகளும் உச்சபட்ச உஷார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் பயணிகள் அப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.