சென்னை: மேலூரை தவிர 27 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 12 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 5 பேருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
தமிழக சட்டப் பேரவையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக்கூடிய 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நீண்ட இழுபறிக்கு பின்பு அகில இந்திய காங்கிரஸ் தலைமை நேற்று வெளியிட்டது. மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்று அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்எல்ஏக்கள் 5 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஒரே கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார். இதனால் நேற்றைய தினம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்ற தகவல் பரவியது. அதன்படி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று பிற்பகல் வெளியிட்டார்.
இந்த பட்டியலில், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார். பொன்னேரியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் அசன் மவுலானா, சோளிங்கர் தொகுதியில் முனிரத்தினம் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடும் சூழலில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.