திண்டிவனம்: அணி மாறினார் வேட்பாளர்… விக்கிரவாண்டி தொகுதியில் ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் புகழேந்தி, அன்புமணியிடம் ஐக்கியமானார். அணி மாறிய அவரை கட்சியை விட்டு நீக்குவதாக, ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பா.ம.க.,வில் தற்போது ராமதாஸ், அன்புமணி என இரு பிரிவாக பிளவு பட்டுள்ளது. வரும் தேர்தலில் இரு தரப்பினரும் போட்டி போட்டிக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இரு தரப்பு வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றனர்.
இதில் விக்கிரவாண்டி தொகுதியில், அன்புமணி தரப்பில் மயிலம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ., சிவக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதியில் ராமதாஸ் அணி சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், புகழேந்தி சென்னையில் அன்புமணியை சந்தித்து, அவரது அணியில் ஐக்கியமாகி விட்டார். இதனால் டென்ஷனான ராமதாஸ், தனது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புகழேந்தி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.