பாட்னா: வரும் 10-ம் தேதி மாநிலங்களவை எம்.பி.,யாக நிதிஷ்குமார் பதவியேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில், மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கினார்.
இதனால், முதல்-மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்கிறார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. அவர் பதவி விலக கூடாது என தொண்டர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், எம்.எல்.சி. பதவியில் இருந்து நிதிஷ் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகினார்.
இந்நிலையில், வருகிற ஏப்ரல் 10-ந்தேதி முறைப்படி மாநிலங்களவை எம்.பி.யாக அவர் பதவியேற்க உள்ளார் என பீகார் பா.ஜ.க. தலைவர் சஞ்சய் சராவ்கி இன்று கூறினார். அடுத்து புதிய அமைச்சரவை உருவாவதற்கான நெறிமுறைகளை பற்றி குறிப்பிட்ட அவர், அதில் மூத்த கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்படுவர் என கூறினார்.
இதற்காக முதல்-மந்திரி, நம்முடைய பா.ஜ.க.வின் மத்திய தலைமை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கூடி முடிவு செய்வர் என்று கூறினார்.