தஞ்சாவூா்: 20 ஆண்டுகளாக முகம், வாய் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட வாலிபர் சிறு தழும்புகளின்றி ஒரே அறுவை சிகிச்சையில் நிரந்தர தீர்வை அளித்து தஞ்சை ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
20 வயது வாலிபர் ஒருவருக்கு பிறந்ததிலிருந்து வாயை முழுமையாக மூடாத நிலை இருந்து வந்தது. இதனால் அந்த வாலிபர் மிகவும் சிரமப்பட்டு வந்தார். மேலும் அவருக்கு உணவு மென்று உண்ண முடியாததால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபர் வீட்டை விட்டு வெளியில் வராமல் தன்னம்பிக்கையை இழந்தார். மேலும் பலரின் கிண்டல், கேலியும் அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருந்தது.
இந்நிலையில் தங்கள் மகனின் இந்த நிலையை உணர்ந்த பெற்றோர் தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக இதனை சரி செய்துவிடலாம் என திடமான நம்பிக்கையை அந்த வாலிபரின் பெற்றோருக்கு அளித்தனர்.
மேலும் பெற்றோரின் ஒப்புதலுடன் தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்பிரமணியன் திறமை வாய்ந்த மருத்துவக்குழுவை கொண்டு மிக துல்லியமாக மேல் மற்றும் கீழ் தாடை இடையிலான இடைவெளியை சரிசெய்து, முகம் மற்றும் வாய் எலும்புகளை சீரமைத்து அறுவை சிகிச்சை வாயிலாக அந்த வாலிபரின் வாயினை முழுமையாக திறக்கவும், மூடவும் வைத்து எந்த ஒரு சிறு தழும்புகளின்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த வாலிபர் தனது அன்றாட உணவை மென்று உண்பதால் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனை நிரந்தரமாக நீங்கி உள்ளது. தற்போது அந்த வாலிபர் சராசரி மனிதர்கள் போல் நன்கு உணவை மென்று சாப்பிடுவதால் மன உளைச்சல் நீங்கி உள்ளார்.
அந்த வாலிபருக்கு அளிக்கப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்பிரமணியன் விரிவாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆர்தோக்னாதிக் சர்ஜரி என்பது முகம் மற்றும் தாடை எலும்பு குறைபாடுகள் உள்ள பேஷன்ட்ஸ்க்கு செய்யக்கூடிய அறுவை சிகிச்சை தான் ஆர்தோக்னாதிக் சர்ஜரி. பிறந்ததில் இருந்தே வாயை மூட முடியாமல் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட இந்த வாலிபருக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டது. அதனால் ரொம்ப மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டார். அவருக்கு சி.டி (CT Scan) எடுத்து பார்த்து, எக்ஸாமினேஷன் பண்ணி பார்த்ததுல அவருக்கு ‘ஸ்கெலிட்டல் கிளாஸ் 3 டிஃபார்மிட்டி’ (Skeletal Class III Deformity) அப்படிங்கிற ஒரு முகத் தாடை குறைபாடு இருக்குறத நாங்க கண்டுபிடிச்சு அந்த வாலிபரின் பெற்றோரிடம் தெளிவாக விளக்கம் அளித்தோம். அறுவை சிகிச்சையில சரி செய்யலாம் என்று தெரிவித்தவுடன் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
ஊட்டச்சத்து குறைபாடு இருந்ததினால் அந்த வாலிபருக்கு மெல்லிசான எலும்பு. அதாவது பத்து பேப்பர் எடுத்து சேர்த்து வச்சீங்கன்னா எவ்வளவு திக்னஸ் இருக்குமோ அந்த அளவுதான் இந்த பேஷன்ட்டுக்கு எலும்போட திக்னஸே இருந்தது. நம்ம லேசா மாத்தி கட் பண்ணா கூட அந்த எலும்பு முறிஞ்சு போறதுக்கான வாய்ப்புகள் ரொம்பவே இருந்தது. அதே மாதிரி நம்ம எலும்பை நகர்த்தும்போது சுவாசக் குறைபாடு வந்துடக்கூடாது. இவற்றை எல்லாம் நுணுக்கமாக கவனித்து நியூ டெக்னாலஜிஸ், அதாவது ‘3D சர்ஜிக்கல் பிளானிங்’ (3D Surgical Planning), ‘வெர்ச்சுவல் சர்ஜிக்கல் பிளானிங்’ (Virtual Surgical Planning) அப்படின்னு சொல்லுவோம். அந்த டெக்னாலஜி மூலமா கம்ப்யூட்டரில் செய்து பார்த்தோம் சுவாசக்குழாய் எப்படி மாறும்ங்கிறத முன்னாடியே நம்ம விஷுவலைஸ் செய்து பார்த்த பின்னர் அறுவை சிகிச்சை செய்தோம்.
துல்லியமாக திட்டமிட்டபடி நாங்க அறுவை சிகிச்சை ஆரம்பிச்சு செய்து முடித்தோம். இப்போது அந்த வாலிபர் மற்றவர்கள் போலவே நன்கு சாப்பிட தொடங்கி விட்டார். இவ்வாறு விரிவான விளக்கம் அளித்தார். அப்போது மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் மோகன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் நாராயணன் , மயக்கவியல் துறை நிபுணர் டாக்டர் ராஜராஜன் , விபத்து மற்றும் அவசரகால பிரிவு நிபுணர் டாக்டர் ஹரி மற்றும் டாக்டர்கள், நிர்வாகத்தினர் உடன் இருந்தனர்.
ஒரே அறுவை சிகிச்சையில் 20 ஆண்டுகால பிரச்சனையை தீர்த்து தனக்கு வாழ்க்கை அளித்த மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் அந்த வாலிபர் தனது நெஞ்சார்ந்த நன்றியை புன்னகை நிறைந்த முகத்தோடு கூறினார்.
,