இமாச்சல பிரதேசம்: கொய்யாப் பழம் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்துத் தாக்கிய ஓய்வுபெற்ற ராணுவ வீரரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இமாச்சல பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர், தனது தோட்டத்தில் இருந்து கொய்யா பழங்களைப் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலானதை தொடர்ந்து தனது வீட்டு தோட்டத்தில் இருந்து கொய்யா பழங்களை பறித்த 4 வயது சிறுமியை, கட்டி வைத்து தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் அத்துமீறல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் மகளான பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, படிக்கட்டுகளில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் உதவி கோரி கெஞ்சும் காட்சி அடங்கிய வீடியோ அண்மையில் வைரலாக பரவியது. முன்னாள் ராணுவ வீரரான குறிப்பிட்ட அந்த வீட்டின் உரிமையாளர், தனது தோட்டத்தில் கொய்யாப்பழங்களை பறித்த அந்த சிறுமியை பிடித்து வீட்டிற்குள் இழுத்து வந்து, அச்சிறுமியின் கைகளையும் கால்களையும் சங்கிலிகொண்டு கட்டி வைத்ததோடு, அந்த சிறுமியை தாக்கவும் செய்து உள்ளார். இந்த விஷயம் குறித்து அறிந்த சில கிராமவாசிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.
மீட்பு நடவடிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோவே பின்னர் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் போது, அந்த சிறுமி உதவிக்காகக் கதறி அழுவதும், “என்னைக் காப்பாற்றுங்கள்” என்று மீண்டும் மீண்டும் கூக்குரலிட்டு கெஞ்சுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஈவு இரக்கமின்றி சிறுமியை கட்டி வைத்து தாக்கிய அந்த முன்னாள் ராணுவ வீரர் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்தினரிடம் தனது தவறை ஒப்புக்கொண்டு, பகிரங்க மன்னிப்பு கோரி உள்ளார்.