தஞ்சாவூர்: இரு மொழிக் கொள்கையே தமிழ்நாட்டின் ஒரே கொள்கை என்பதால், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் மற்றும் திருவையாறு தேரடியில் திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரனை திங்கள்கிழமை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் மேலும் பேசியது:
தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால், இந்தியாவில் வளரும் மாநிலங்களில் தமிழ்நாடு 11.19 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவ்வளவு சாதனைகள் செய்த நமக்கு மத்திய பாஜக துணை நின்றதில்லை. நமக்கு திட்டங்களும் கொடுத்ததில்லை. மத்திய அரசிலிருந்து நமக்கு வர வேண்டிய நிதிப் பகிர்வும் வரவில்லை.
இந்நிலையில், தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய ரூ. 3 ஆயிரத்து 200 கோடி கல்வி நிதியைக் கொடுக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை கூறினார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்கச் செய்ய வேண்டும்; மும்மொழிக் கொள்கையை மீண்டும் தமிழ்நாட்டில் நுழைக்க வேண்டும் என மத்திய அரசு முயற்சி செய்கிறது.
ஆனால், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மீண்டும் இந்தி கற்க வேண்டிய நிலைமை தமிழ்நாட்டுக்கு வரும். தமிழ், ஆங்கிலம் என்கிற இருமொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டின் ஒரே கொள்கை. எனவே, இரு மொழிக் கொள்கையைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி வருகிறோம்.
எனவே, வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாடு அணியா? தில்லி அணியா என்பதை நிர்ணயிக்கிற தேர்தல் என முதல்வர் கூறி வருகிறார். இதில், மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி கொண்ட தில்லி அணியை வீழ்த்தி, தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின். பின்னர், பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஏ.எம். ஷாஜகானை ஆதரித்து கபிஸ்தலம் பாலக்கரையிலும், கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளர் க. அன்பழகனை ஆதரித்து காந்தி பூங்கா அருகிலும் பிரசாரம் செய்தார்.