சென்னை: தமிழகத்தில் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும், ரேஷன் அட்டைக்கு தலா 2 ஆயிரம் நிதியுதவி என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. “தமிழகத்தை முன்னேற்றுவோம்” என்ற தலைப்பில் 36 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வெளியிட்டார்.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு: மாநில அரசு துறைகளில் உள்ள 3 லட்சம் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும். காவல்துறையில் 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும். நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2,000 பென்சன் உறுதி செய்யப்படும்.
கல்வி துறையில் 6 மண்டலங்களிலும் தனிச் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும். அரசு பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உதவியுடன் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படும். ஆசிரியர்களுக்கு AI பயிற்சி அளிக்கப்படும். 38 மாவட்டங்களிலும் மனநல மருத்துவமனைகள் அமைக்கப்படும். மனநல முதலுதவிக்கு 10,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.