சென்னை: ‘சரிசெய்ய முடியாத அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளது’ என்று கடிதம் எழுதிவிட்டு மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி விலகி உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை சரிசெய்ய முடியாத அளவுக்கு மிகவும் மோசமாகிவிட்டது. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
“நான் மிகுந்த அன்புடன் நேசித்த நமது கட்சியிலிருந்து எனது ராஜினாமாவை மிகுந்த வேதனையுடன் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இதில் வருத்தம் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த அன்பு ஒருதலைப்பட்சமாகவே இருந்துவிட்டது.
சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் எனக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும், நீங்களும் உறுதியாக இருந்தபோதிலும், எனக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு, அதன் மூலம் நான் அவமானப்படுத்தப்பட்டேன்.
இது என்னை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியது மட்டுமல்லாமல், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. மகிளா காங்கிரஸ் தலைவராக இருக்கும் எனக்கு, கட்சித் தலைமை அநீதி இழைத்துவிட்டதாக நான் உணர்கிறேன். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் நான் இது குறித்து முறையிட்டேன். ஆனால் வழக்கம்போல அது வீணாகிவிட்டது.
இந்த நிலையில் என்னால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது. எனக்கே நீதி மறுக்கப்படும்போது, என்னுடன் பணியாற்றும் சக பெண் நிர்வாகிகள் மற்றும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு உரிமையை என்னால் எப்படிப் பெற்றுத் தர முடியும்?
எனவே, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நான் ராஜினாமா செய்கிறேன். இருப்பினும், நமது கட்சி மீதும், காந்தி குடும்பத்தினர் மீதும் எப்போதும் அன்புடன் இருப்பேன்.” தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை சரிசெய்ய முடியாத அளவுக்கு மிகவும் மோசமாகிவிட்டது. இது கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து காங்கிரஸும் அவரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.