தஞ்சாவூா்: மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 100க்கும் அதிகமானோர் தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டுகளை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க தேர்தல் அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை 26-வது வார்டு அ.தி.மு.க செயலாளர் பி.கண்ணன், கீழவாசல் பகுதி சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஆர். ரபீக், 14-வது வார்டு பிரதிநிதி அப்துல், 26-வது வார்டு பிரதிநிதி மன்சூர் ஆகியோர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு தஞ்சை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்.ராமநாதன் கட்சி துண்டு அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்றார். அப்போது அவர் பேசுகையில், திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகள் உலகெங்கும் பரவி உள்ளது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாட்டை முதலமைச்சர் மாற்றி காட்டி உள்ளார். வரும் தேர்தலிலும் கண்டிப்பாக தி.மு.க தான் வெற்றி பெறும். மீண்டும் முதலமைச்சர் ஆக மு.க.ஸ்டாலின் வருவார்.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டு இன்றைய தினம் தஞ்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்துள்ளனர் . இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் ஆவர். ஏற்கனவே தினம்தோறும் அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தி.மு.க.வில் இணைந்த வண்ணம் உள்ளனர். இன்னும் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.
தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தஞ்சை சட்டமன்ற தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த வெற்றியை தலைவரிடம் சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், பகுதி செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகி ரமேஷ், வார்டு பிரதிநிதி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.