தஞ்சாவூர்: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ல் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக இயற்கை விவசாயி அரு. சீர். தங்கராசு செங்கல் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் யாரையும் குறைகள் கூறாமல் தனக்கு வாக்களித்து ஒரு வாய்ப்பு அளிக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.
இயற்கை விவசாயம் என்பது தொன்று தொட்ட காலம் முதலே நம்மிடையே இருந்து வந்த ஒன்றாகும். இடைப்பட்ட காலத்தில் அதை மறந்தவர்கள் கூட இன்று பெரும்பாலானோர் இயற்கை விவசாயம், இயற்கை உணவு என இயற்கையை நோக்கி திரும்பியுள்ளனர். மாறிவரும் இயற்கையும், காலநிலையும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வரும் இந்த நேரத்தில் இயற்கை வேளாண்மையின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து வருகின்றனர்.
பஞ்சபூதங்களையும் பாதிக்காமல் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் பொழுது நாம் நமது அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற வேளாண் முறையை தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம் என்று கடந்த 20 ஆண்டுகளுக்கு நம் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு அதனை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து தரமான பொருட்களை மக்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைந்து வருகிறார் தஞ்சை மாவட்டம் அருமலைக்கோட்டை பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி தங்கராசு (59). இவர்தான் தற்போதைய சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில் சுயேட்சையாக செங்கல் சின்னத்தில் களம் இறங்கி உள்ளார்.
சிறந்த உயர்வான கல்வி, மருத்துவம் மட்டுமே இலவசம், மற்ற இலவசத்தை எதிர்பார்க்கும் ஏழ்மை இல்லாத நிலைக்கு மக்கள் வாழப் பாடுபடுவேன். சீர்கெட்டிருக்கும் நிலத்தடி நீரை மக்கள் பருகாமல் மழை நீரை சேமித்து பருகி நோயற்ற வாழ்வு வாழ வழி வகைச் செய்வேன். நிலத்தடி நீரை ஏரி – குளங்கள் மூலம் மேன்மைப்படுத்தி பல்லுயிர்களுக்கும் பயன்சேரப் பாடுபடுவேன். பண்பாட்டு சீர்கேட்டிலிருந்து இளைஞரை மீட்டு இயற்கையே இறைவன் எனும் சமத்துவ சித்தாந்தங்களையும். தமிழர் பண்பாடுகளையும் செயல்படுத்துவேன் என பல்வேறு வாக்குறுதிகளை கூறி தன்னந்தனியாக வாக்குகள் சேகரித்து வருகிறார். அந்த வகையில் பாபநாசம் தொகுதியை சேர்ந்த எழுத்தாளர் சி.எம்.முத்துவை சந்தித்து தனக்கு வாக்களிக்க கோரி ஆதரவு திரட்டினார் சுயேட்சை வேட்பாளர் தங்கராசு.