தஞ்சாவூர்: பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ள இயற்கை விவசாயி அரு.சீர். தங்கராசு செங்கல் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் பாபநாசம் சட்டமன்ற தொகுதியை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
சுயேட்சை வேட்பாளர் இயற்கை விவசாயி அரு சீர். தங்கராசு தனியொருவராக பாபநாசம் சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அவர் பாபநாசம் சட்டமன்ற தொகுதியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில், பொதுமக்கள் நலனை மையமாகக் கொண்டு 10 முக்கிய வாக்குறுதிகளை தெரிவித்துள்ளார். அதன்படி கல்வி, சுகாதாரம், விவசாயம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல துறைகளில் மேம்பாடு ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன்படி, அனைத்து தரப்பினருக்கும் இலவச கல்வி மற்றும் தரமான பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும். மாணவர்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மேலும், சுகாதாரத் துறையில் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு, மக்கள் எளிதில் அணுகக்கூடிய வசதிகள் உருவாக்கப்படும்.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, பாசன வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு, நீர் மேலாண்மை திட்டங்கள் மேம்படுத்தப்படும். தொழில் வளர்ச்சிக்காக புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர், சாலை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சமமான வளர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று கிராமங்கள் தோறும் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பெண்கள் மற்றும் முதியோருக்கான நலத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு, சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள 10 முக்கிய வாக்குறுதிகள், பாபநாசம் தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் எனவும், பொதுமக்கள் முழுமையான ஆதரவு வழங்கி செங்கல் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.