சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே 11 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதனால் மக்கள் வெகுவாக அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வெயில் காரணமாக பல நகரங்களில் பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவே காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் 11 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
கரூர் பரமத்தியில் நேற்று அதிகபட்சமாக 106.1 டிகிரி வெயில் கொளுத்தியது. ஈரோட்டில் 104.3 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி, மதுரை நகரத்தில் 103.2 டிகிரி, திருச்சியில் 103.1 டிகிரி, வேலூரில் 102.7 டிகிரி, கோவையில் 101.6 டிகிரி, தர்மபுரி, நாமக்கல், பாளையங்கோட்டையில் 101.3 டிகிரி, சேலத்தில் 100.7 டிகிரி வெயில் பதிவானது.
மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் வெயில் கொளுத்தியது. சென்னை மீனம்பாக்கத்தில் 97.8 டிகிரி வெயிலும், நுங்கம்பாக்கத்தில் 93.5 டிகிரி வெயிலும் பதிவானது. சென்னையில் வெயில் 100 டிகிரிக்கும் கீழே குறைவாக பதிவானாலும் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதுமே பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். வீடுகளில் உள்ள மின்விசிறியிலும் பகலில் அனல் காற்று வீசுகிறது.
வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெண்கள் குடைகளை பிடித்தவாறும், துணிகளால் முகத்தை மூடியவாறும் செல்கின்றனர். வெயில் காரணமாக பல நகரங்களில் பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவே காணப்படுகிறது.
கடைகளில் இளநீர், நுங்கு, தர்பூசணி ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரத்தில் விவசாய வேலைக்கு செல்பவர்கள், கட்டிட தொழிலாளிகள், வெயிலில் திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் ஆகியோர் கடுமையாக அவதிப்படுகிறார்கள். காலை முதல் மாலை வரை வெயில் அதிகமாக காணப்படுவதால் இரவு நேரத்திலும் வீடுகளில் புழுக்கமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.