விருத்தாசலம்: பிரேமலதா உறுதி… திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உறுதிபடத் தெரிவித்தார்.
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலதா, வாக்களித்த வாக்காளர்களுக்கு கடந்த 3 தினங்களாக தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவித்தும், முக்கிய அலுவலகங்களை ஆய்வு செய்தும் வருகிறார்.
அந்த வகையில் விருத் தாசலம் மார்க்கெட் கமிட்டிக்குச் சென்று அங்கு எடையளவு குறித்தும், கொள்முதல் செய்யப்படும் தானியங்கள் குறித்தும், ஆலடி சாலையில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் பேருந்து நிலையம் பகுதியிலும் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து விருத்தாசலம் மசூதியில் தொழுகையில் ஈடுபட வந்த இஸ்லாமியர்களிடம் நன்றி கூறினார்.
அப்போது செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: விருத்தாசலத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன். இனிவரும் காலங்களில் தொகுதியில் தங்கியிருந்து, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். சென்னையில் பெரும்பலான இடங்களில் மின் வெட்டு இருப்பதாக அறிகிறேன். விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு அவகாசம் கொடுப்போம். பொறுத்திருந்து பார்க்கலாம். இவ்வாறு கூறினார்.
திமுக கூட்டணியில் இருந்து விசிக, ஐயுஎம்எல் போன்ற கூட்டணிக் கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து, அமைச்சரவையிலும் இடம் பிடித்திருப்பது தொடர்பாக கேட்டபோது, “அவர்களது விருப்பம். அதை விமர்சிப்பதில் அர்த்தமில்லை. எங்களைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் தொடர்கிறோம்” என்றார். விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் மீதான ஆ.ராசா விமர்சனம் தொடர்பாகவும் கருத்துக் கூற மறுத்து விட்டார்.