சென்னை: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? – ஜூன் 1 தேதியில் மாற்றம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், அரசுப் பள்ளிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், “பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் மிக முக்கியம். எனவே, அவர்கள் அனைவரது பிரச்சனைகளைக் கேட்டறிந்து அதற்குத் தீர்வு அளிக்கப்படும். அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிந்து தனிக் குழுவின் மூலமாகத் தீர்வு காணப்படும் .
பள்ளியில் மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவை தொடரும். மேலும், அது வருங்காலங்களில் இன்னும் மேம்படுத்தப்படும். அதே போல, பள்ளிகளில் அளிக்கப்படும் உணவுகள் தரமற்றவையாக இருப்பின், அவற்றின் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்குத் தூய்மையான மற்றும் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்வோம். எந்த காரணத்தைக் கொண்டும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உணவு போன்ற விஷயங்களில் எந்த வித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்.
இனிவரும் காலங்களில் பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக இயங்கும். இதில் யாரேனும் சட்டவிதிகளை மீறிச் செயல்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படும். மேலும், கோடை விடுமுறை முடித்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, ஜூன் 1 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கோடை வெப்பத்தின் தாக்கம் மற்றும் வெப்ப அலைகள் வீசும் அபாயம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, பல்வேறு தரப்பில் இருந்து பள்ளிகளைத் தாமதமாகத் திறக்க வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும், அது குறித்த விவரங்களை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.