இங்கிலாந்து: இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி செம்ஸ்ஃபோர்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, ஷபாளி வெர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய யாஸ்திகா பாட்டியா 40 பந்துகளில் 54 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 40 பந்துகளில் 69 ரன்களும் விளாசி அணியை மீட்டனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது.
189 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது. ஏமி ஜோன்ஸ் மட்டும் 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்துப் போராடினார். ஹீத்தர் நைட் 22 ரன்கள் சேர்த்தார்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.