சென்னை: ஓய்வு பெற்றார்… சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சுரேஷ்குமார் நேற்று ஓய்வு பெற்றார். கடந்த 10 ஆண்டுகளில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பளித்து நீதித்துறையில் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையை சேர்ந்த அவர், 1989ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியை தொடங்கினார். பின்னர் 2016 அக்டோபர் 5ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
மெரினா கடற்கரை சீரமைப்பு, ஏரி மற்றும் குளங்கள் தூர்வாருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வடகலை – தென்கலை விவகாரம், நடிகர் விஜயின் சொகுசு கார் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், உயர்நீதிமன்ற கட்டடக்குழு தலைவராக இருந்து மாநிலம் முழுவதும் புதிய நீதிமன்ற கட்டடங்கள் உருவாக முக்கிய பங்காற்றினார். சென்னை உயர்நீதிமன்றம் அருகிலிருந்த பழமையான சட்டக்கல்லூரி வளாகத்தையும் உலகத் தரத்தில் புனரமைத்து, அங்கு புதிய நீதிமன்ற அறைகள் அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஓய்வு பெற்றதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 51 ஆக குறைந்துள்ளதுடன், தற்போது 24 காலிப்பணியிடங்கள் உள்ளன.