புதுடெல்லி: பெட்ரோல் விலை உச்சம்… மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக இந்தியாவிலும் கடந்த 15-ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 11 நாட்களில் 5 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் பெட்ரோல் 34 காசுகளும், டீசல் 23 காசுகளும் உயர்ந்தன. டெல்லியில் பெட்ரோல் ரூ.102.12 மற்றும் டீசல் ரூ.95.20 ஆகவும், மும்பையில் பெட்ரோல் ரூ.111.21 மற்றும் டீசல் ரூ.97.83 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.113.51 மற்றும் டீசல் ரூ.99.82 ஆக உள்ளது. ஐதராபாத்தில் பெட்ரோல் ரூ.115.62 மற்றும் டீசல் ரூ.103.76 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவிலேயே அதிக விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படும் மாநிலமாக தற்போது ஆந்திரப் பிரதேசம் மாறியுள்ளது. விஜயவாடாவில் பெட்ரோல் ரூ.117.25 மற்றும் டீசல் ரூ.104.96 ஆகவும், விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் ரூ.116.39 மற்றும் டீசல் ரூ.104.11 ஆகவும் உள்ளது.
குறிப்பாக திருப்பதியில் பெட்ரோல் ரூ.117.88 மற்றும் டீசல் ரூ.105.49 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.