திருப்பூர்: பஞ்சு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒசைரி நுால் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளதால் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பஞ்சு பற்றாக்குறை ஏற்படும் என்ற தகவலால் கடந்த சில மாதங்களாக பஞ்சு மற்றும் நுால் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வந்தன.
இதையடுத்து ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பஞ்சு இறக்குமதி வரி 11 சதவீதம் அக்.31 வரை ரத்து செய்யப்பட்டது.
இதனால் பஞ்சு விலை கேண்டிக்கு ரூ.2,500 வரை குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஒசைரி நுால் விலையும் குறைந்துள்ளது.
பஞ்சு விலை மேலும் குறைந்தால் நுால் விலையும் கூடுதலாக குறையும் என தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.