சென்னை: காற்று மாசு அதிகரிப்பு… தமிழகத்தில் அதிகரித்து வரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, சாலைகளில் உள்ள மண் புழுதி, வாகனப்புகை, கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
காற்று மாசு அதிகம் உள்ள பகுதியில் வசிப்போருக்கு நுரையீரல், சுவாச பிரச்னை உள்ளிட்ட பல்வேறு உடல் நல பாதிப்புகள் உருவாகும் அபாயம் உள்ளது. காற்று மாசு அளவை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் கணக்கிட்டு அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
காற்று மாசுபாடு தரக்குறியீடு 0 முதல் 50 வரை இருப்பது பிரச்னை இல்லை என்பதை குறிக்கிறது. 50 முதல் 100 வரை இருப்பது திருப்திகரமானது; 101 முதல் 200 வரை மிதமானது; 201 முதல் 300 வரை மோசமானது; 301 முதல் 400 வரை மிக மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்துள்ள சென்னை மணலியில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காற்றின் தரக்குறியீடு 200 முதல் 300 வரை பதிவாகிறது. சில நேரங்களில் 300-க்கும் மேல் பதிவாகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 100 முதல் 200 வரை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் பகுதியில் 100 முதல் 200 வரை காற்றின் தரம் மிதமான மோசம் என பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 50 முதல் 100 வரை பதிவாகியுள்ளது.