புதுடில்லி: கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவிய நிலையில், நேற்று பெய்த கனமழையால் டெல்லி விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
டெல்லியின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் வெப்பத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு நிம்மதி கிடைத்தாலும், விமான போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
டெல்லி சர்வதேச விமான நிலைய ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மோசமான வானிலை காரணமாக பல விமான சேவைகள் தாமதமாகியதுடன் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இரவு 7:52 மணி நிலவரப்படி மொத்தம் 521 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து தகவல்களை தெரிந்து கொள்ளுமாறும், விமான நிலையத்திற்கு மெட்ரோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.