சென்னை: ‘அரசன்’ படத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டார் நடிகர் சிம்பு என்று தயாரிப்பாளர் தாணு பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைபுலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வடசென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர் மற்றும் அமீர் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துவருகின்றனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு, நடிகர் சிம்புவின் அர்ப்பணிப்பு குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில், “சிம்பு முதலில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக தலைமுடியை வளர்த்து வந்தார். ஆனால் ‘அரசன்’ படத்தின் கதையை கேட்டதும் அந்த படத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்த படத்திற்காக தனது தோற்றத்தை முழுமையாக மாற்றிக்கொண்டார்” என்று கூறினார்.
மேலும், “சிம்பு இந்த படத்தின் கதாபாத்திரமாகவே வாழ தொடங்கிவிட்டார். அவருக்கு எவ்வளவு நேரம் படப்பிடிப்பு ஒதுக்கப்பட்டாலும், ஒரு மணி நேரத்திற்கு முன்பே வந்து விடுவார். அவர் ஒருபோதும் தாமதமாக வந்ததில்லை” என்றும் தெரிவித்தார்.
அதேபோல், “அரசன் படத்திற்கு இசையமைக்க அனிருத்தை சிம்புவே கேட்டுக்கொண்டார். சமீபத்தில் வெற்றிமாறன் காட்டிய ஒரு காட்சியில், எஸ்.டி.ஆர் நடந்து வரும் காட்சி மிகவும் இனிமையாக இருந்தது” என்றும் தாணு பாராட்டினார்.