கோவை: “மக்கள் மாற்றம் விரும்பியதால்தான் விஜய்க்கு வாக்களித்தனர்” என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார் மற்றும் சத்யராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சிவகுமார், “இப்போது அனைவரும் கைப்பேசியுடன் தனிமையில் வாழ்கிறோம். அதை விட்டு குடும்பத்தினருடன் பேச வேண்டும். நண்பர்களுடன் மனம் திறந்து பேசுவது அவசியம். 85 வயதான நான் இன்றும் தினமும் 20 நண்பர்களுடன் பேசுகிறேன்” என்றார்.
மேலும், “40 வயதுக்கு பிறகு இறைச்சி உணவை தவிர்க்க வேண்டும். நடைப்பயிற்சி உடலுக்கு மிக முக்கியம்” என்றும் கூறினார்.
அரசியல் குறித்து பேசிய அவர், “காமராஜர் போன்ற எளிமையான முதல்வரை பார்க்க முடியாது. ஆனால் மக்கள் மாற்றத்தை விரும்பியதால் தி.மு.க.வை தேர்வு செய்தனர். இப்போது மீண்டும் மாற்றம் வேண்டும் என நினைத்ததால் ஜோசப் விஜய்க்கு வாக்களித்துள்ளனர். இளைய தலைமுறை, பெண்கள் மற்றும் முதல் வாக்காளர்கள் பெரும்பாலும் அவருக்கு ஆதரவாக உள்ளனர். அவர் நல்லது செய்வார் என நம்புவோம்” என்றார்.
விழாவில், “எங்கள் கிராமத்தில் முதலில் SSLC படித்தவன் நான் தான். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, விஜய் ஆகிய நான்கு முதல்வர்களுடன் நடித்திருக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
சிவகுமார் விஜய்யை பாராட்டிப் பேசியபோது அருகில் இருந்த சத்யராஜ் அமைதியாக இருந்தது கவனத்தை ஈர்த்தது. பின்னர் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நடவடிக்கையை பாராட்டிய சத்யராஜ், “இளைஞர்கள் போதை பழக்கத்திலிருந்து வெளியே வர வேண்டும். கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களின் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவது பாராட்டத்தக்கது” என்றார்.