சென்னை: நகர்ப்புறங்களில் சுகாதாரத்தையும் பசுமையையும் மேம்படுத்தும் நோக்கில், அடுத்த ஆறு மாதங்களை இலக்காகக் கொண்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை நேரடியாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர், சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தினசரி காலையில் கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குப்பை, கட்டடக் கழிவுகள், அனுமதியற்ற போஸ்டர்கள் போன்றவை கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சாலையோரங்கள் மற்றும் சென்டர் மீடியன்களில் பசுமை பரப்பை அதிகரிக்கவும், வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து மறுசுழற்சி மற்றும் அறிவியல் முறையில் அகற்றவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதல்வர் நேரடியாக ஆய்வு மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.