சென்னை: கல்வெட்டு கண்டுபிடிப்பு… திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ள தின்னகுளம் கிராமத்தில், விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
தின்னகுளம் கிராமத்தில், பழமையான திருநெற்குன்றநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறையினர் சமீபத்தில் படியெடுத்தனர். அதில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, விக்கிரம சோழன் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
பொய்கை நாடு இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது: திருநெற்குன்றநாதர் சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. அவற்றில், விக்கிரம சோழனின் 14வது ஆட்சி காலமான 1,132ல் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை படியெடுத்துள்ளோம்.
அதில், திருபுவனமுற்றுடை வளநாட்டில் உள்ள பொய்கை நாட்டின், மதுராந்தக சதுர்வேதிமங்கலத்தில் உள்ள வங்கீப்பூரத்தைச் சேர்ந்த பரம்பொருளார் பட்டரின் மகன், பரமேஸ்வரன் என்பவர் அளித்த பொன் தானம் பற்றிய தகவல் உள்ளது.
திருச்சிலம்பு அதாவது, மகாதேவரான சிவனுக்கும், நாச்சியாரான தேவிக்கும் சூட்டுவதற்காக ஒரு திருச்சூட்டு, ஒரு திருச்சடை, இரண்டு திருத்தோடு, ஒரு திருவாரம், ஒரு திருக்கைக்காரை, இரண்டு திருச்சிலம்பு, ஒரு செங்கலநீறு, ஒரு திருத்தொடை அடை, ஒரு திருப்பிறை ஆகியவற்றை செய்யும் வகையில், 120 கழஞ்சு, 9 மஞ்சாடி தங்கத்தை தானமாக அளித்துள்ளார்.
இன்றைய மதிப்பில், ஒரு கழஞ்சு பொன் என்பது 5.5 கிராம்; ஒரு மஞ்சாடி என்பது 0.133 கிராம். அதன்படி, 648.6 கிராம் தங்கத்தை, அதாவது, 81.15 சவரன் தங்கத்தை சிவனுக்கும், பார்வதிக்குமான ஆபரணங்கள் செய்ய தானமாக தந்துள்ளார். இதன்படி, கடவுளுக்கு சோழர் காலத்தில் அணிவிக்கும் அணிகலன்கள் பற்றிய விபரங்களை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.