சென்னை: பெருங்களத்தூர் மாணவி சாதனை… உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறி, பெருங்களத்துாரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சாதனை படைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்துாரைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி அருணா. இவர்களது 16 வயதான மகள் நிஷா, துரைப்பாக்கத்தில் உள்ள ஏ.பி.எல்., குளோபல் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். மலையேற்ற வீரரான தந்தை பார்த்து வளர்ந்த மகள் நிஷாவிற்கு, சிறு வயதிலேயே பெரிய மலைகளில் ஏறி, சாதனை படைக்க வேண்டும் என்ற கனவு உருவானது.
தற்போது, உலகின் ஏழு கண்டங்களில் உள்ள மிக உயரமான ஏழு சிகரங்களை தொடும் லட்சியத்துடன் பயணிக்கிறார். தற்போது, ஐந்து சிகரங்களில் ஏறிய இந்தியாவின் இளம் வீராங்கனை என்ற உலக சாதனையை படைத்துள்ளார். அடுத்தபடியாக, ஏழு சிகரங்களிலேயே, மிகவும் கடுமையான வானிலையை கொண்ட வட அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள, ‘டெனாலி’ சிகரத்தில் ஏற உள்ளார்.
இது குறித்து மாணவி நிஷா கூறியதாவது: என் வெற்றிக்குபின் இரண்டு ஆண்டு கடுமையான பயிற்சி உள்ளது. குறைந்த ஆக்சிஜன் உள்ள மலைப்பகுதிக்கு உடலைப் பழக்கப்படுத்த, ஒரு மாதம் முழுமையாக ‘ஹைபோக்சிக் டென்டில்’ அதாவது ஆக்சிஜன் குறைவாக உள்ள டென்டில் தங்கி சுவாச பயிற்சி பெற்றுள்ளேன்.
மேலும், உடற்பயிற்சிக் கூடத்தில் ஆக்சிஜன் அளவைக் குறைக்கும் முகமூடியை அணிந்தும் பயிற்சி பெற்றேன். மேலும், 45 நாட்கள் நடந்த இந்த நெடிய பயணத்தில், மூன்றுக்கும் அதிகமான முகாமில் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தி தங்கி, இந்த பயணத்தைச் செய்தோம்.
இவ்வளவு கடின உழைப்பிற்குப் பின் மலையின் உச்சியை அடைந்து, அங்கு 15 நிமிடங்கள் நின்றபோது, பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்தபடியாக ‘டெனாலி’ சிகரத்தில் ஏற உள்ளேன். அங்கு வெப்பநிலை -50° செல்சியஸ் முதல் -60° செல்சியஸ் வரை குறையும் அபாயம் உள்ளது.
எவரெஸ்ட் மலையேற்றத்தைப் போல இங்கு, ‘ஷெர்பா’ வழிகாட்டிகளின் உதவி கிடைக்காது. மலையேறுபவர்கள் தங்களுக்கு தேவையான 50 முதல் 60 கிலோ எடையுள்ள பொருட்களை, தாங்களே சுமந்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிஷாவின் சாதனை குறித்து அவரது தந்தை சசிகுமார் கூறியதாவது: ஏழு கண்டங்களில் உள்ள ஏழு மிக உயரமான சிகரங்களையும் ஏறும், உலகின் மிக இளவயது பெண் என்ற உலக சாதனையை நிஷா குறிவைத்துள்ளார். இதுவரை 5 சிகரங்களை முடித்துள்ள அவர், டெனாலிக்குப் பின் நவம்பர் மாதம் அண்டார்டிகா செல்ல உள்ளார்.
இதற்கு முன் மும்பையைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன், தன் 17-வது வயதில் இந்த சாதனையைச் செய்திருந்தார். தற்போது நிஷா தனது 16 வயதிலேயே 5 சிகரங்களை ஏறி சாதனை படைத்துள்ளார்.
டிச., 8 அல்லது 9ம் தேதிக்குள் தன் 7 சிகர பயணங்களையும் முடிக்கும்போது, நிஷாவின் வயது 16 ஆண்டு மற்றும் 9 மாதங்களாக இருக்கும். இதன் மூலம் உலகின் மிக இளவயது பெண் என்ற சாதனையைப் படைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.