சென்னை: மூன்றாம் இடம் பிடித்தது… துாய்மை இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தியதில், தெற்கு ரயில்வே மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
நாடு முழுதும் ரயில் நிலையங்களை துாய்மைப்படுத்தும் வகையில், துாய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘ஸ்வச்சதா துாய்மை’ இயக்கம், கடந்த 2016 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுதும் 18 மண்டலங்களிலும், துாய்மை இயக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, ஆண்டுதோறும் அக்.,1 முதல், 15ம் தேதி வரை பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் உள்ள ஆறு கோட்டங்கள், மூன்று பணிமனைகள், 439 ரயில் நிலையங்களில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மரக்கன்றுகள் நடுவது, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது, நிலையங்கள், தண்டவாளங்கள் பகுதியில் துாய்மைப் பணிகள் மேற்கொள்வது, பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், ‘ஸ்வச்சதா துாய்மை’ இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தியதில், மூன்றாம் இடம் பிடித்துள்ள தெற்கு ரயில்வேக்கு, 2025ம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு ரயில்வே முதலிடம், வடமேற்கு ரயில்வே இரண்டாம் இடம் பிடித்துள்ளன.