புதுடில்லி: ‘இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4ல் துவங்கக்கூடும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் பொதுவாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். இந்த மழைக்காலம் செப்டம்பர் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முதலில் வெளியிடப்பட்ட கணிப்பில் மே 26ம் தேதியே கேரளாவில் பருவமழை துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக அந்த கணிப்பு திருத்தப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகள், கேரளா மற்றும் தமிழகம் பகுதிகளில் ஜூன் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கக்கடலின் பல பகுதிகளிலும் பருவமழை தீவிரமடையும் என்பதால் தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிஷாவில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.