சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, “மக்கள் மேடை” என்ற பெயரில் புதிய மக்கள் இயக்கத்தை துவக்கி, சமூக சேவையில் ஈடுபட விரும்பும் அனைத்து தரப்பினரையும் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் இருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, “மக்கள் மேடை” என்ற புதிய மக்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பதிவில், “நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைகளுக்காகவும் ஒன்றிணைவோம். ஆக்கபூர்வமான கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் திறமைகளை மக்கள் சேவைக்காக பயன்படுத்த ஒரு சிறந்த தளமாக மக்கள் மேடை அமையும்.
அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், இளைஞர்கள் என மாற்றத்தை விரும்பும் அனைவரும் எங்களுடன் இணையலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெளியிடப்பட்ட வீடியோவில், “People’s Movement என்ற மக்கள் மேடை அமைப்பின் மூலம் தமிழகத்திற்காக வேலை செய்ய விரும்புபவர்கள் ஒன்றிணையலாம். மக்கள் சக்தியாக உருவெடுத்து மாநிலத்திற்கு பல நன்மைகள் செய்ய வேண்டும்.
சாமானிய மக்கள் முதல் ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஆசிரியர்கள், ராணுவ வீரர்கள் வரை அனைவரும் தங்கள் அனுபவங்களையும் திறமைகளையும் வழங்கலாம். மாநிலத்திற்காக பணியாற்றக்கூடிய உள்ளூர் தலைவர்களை உருவாக்குவதே நோக்கம்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினிகாந்த் பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். இந்த நிலையில், அவரது மனைவி லதா புதிய இயக்கத்தை துவக்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.