திண்டிவனம்: இண்டி கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என்றும், அந்த கூட்டணி சிதறாமல் தொடர வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி அரசியல் குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “எதிர்பாராத வகையில் இந்த தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் சூழலை தமிழக மக்கள் உருவாக்கித் தந்துள்ளனர். விசிகவின் நீண்டகால கனவு நனவாகும் வகையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.
மேலும், “தொடக்கத்தில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம். ஆனால் விசிக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று தவெக வலியுறுத்தியது. அதன் பின்னரே அமைச்சரவையில் இணையும் முடிவை எடுத்தோம்” என்று கூறினார்.
அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாலும், கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்து இதுவரை விவாதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“சமூகநீதி முற்போக்குக் கூட்டணி குறித்து எங்களிடம் யாரும் பேசவில்லை. இந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் கருத்து சரியானதே. இண்டி கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும். இந்த கூட்டணி சிதறி விடக்கூடாது” என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.