திரிபுரா: எல்லையோர மாநிலங்களில் சட்டவிரோத ஊடுருவலையும் மக்கள் தொகை மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் இந்தியா – வங்கதேச எல்லையில் அமைந்துள்ள லங்கமரா எல்லை சோதனைச்சாவடியில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், “திரிபுரா மற்றும் பீஹார் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் இயற்கைக்கு மாறான மக்கள் தொகை மாற்றத்தை அனுமதிக்க மாட்டோம். சட்டவிரோத ஊடுருவலை தடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மரங்களை பாதுகாத்து பராமரித்து வருவது பாராட்டத்தக்கது என்றும் கூறினார்.
மேலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்றும், வெட்டப்படும் மரங்களைக் காட்டிலும் அதிக அளவில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.