சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில், தவெக கூட்டணியின் ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து வந்தார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து, தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை இடம் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரவீன் சக்கரவர்த்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் முன்னிலையில் சட்டமன்ற செயலாளர் சாந்தியிடம் அவர் வேட்புமனுவை சமர்ப்பித்தார். வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் கூட்டணியின் பெரும்பான்மை ஆதரவால் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.