புதுச்சேரி: புதுச்சேரியின் புதிய டிஜிபியாக ஷாலினி சிங் இன்று (ஆகஸ்ட் 12) பதவியேற்றார். அதன்பின் கவர்னர் மற்றும் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
புதுச்சேரி மாநில போலீஸ் டிஜிபியாக இருந்த ஸ்ரீனிவாஸ் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, டெல்லியில் பணியாற்றிய ஷாலினி சிங், புதுச்சேரி மாநில டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அதன்பின், நேற்று இரவு புதுச்சேரி வந்த அவர், இன்று போலீஸ் தலைமையகத்தில் டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக ஷாலினி சிங்கிற்கு காவல்துறை தலைமையக வளாகத்தில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. டிஜிபியாக பொறுப்பேற்ற ஷாலினி சிங், ராஜ்நிவாஸ் சென்று, துணை நிலை ஆளுநர் கைலாசநாதன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை சட்டப் பேரவை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.