சென்னை: “தமிழகத்தில் பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீரை அகற்றும் பணிகளில் மக்கள் உயிரிழப்பதை தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக, துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “ஆவடி அருகே பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த வாரம், கடலூரில், அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களைக் கூட வழங்காமல், கழிவுநீர் கால்வாய்களில் இறங்கி சுத்தம் செய்ய வைத்த துப்புரவு பணியாளர்களை வன்மையாகக் கண்டித்தோம். ஆனால், அதன் பிறகும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை திமுக அரசு உறுதி செய்யாததால், மேலும் ஒரு உயிர் பறிபோனது. உத்தரபிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் தொழிலாளர்கள் உயிரிழக்க காரணமான ஒப்பந்ததாரர்கள் மீது அம்மாநில அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், நாட்டிலேயே அதிக உயிரிழப்புகள் உள்ள தமிழகத்தில், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தமிழகத்தில் பாதாள சாக்கடை, கழிவு நீர் அகற்றும் பணிகளில் உயிரிழப்புகள் நீடித்து வந்தாலும், அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தி.மு.க அரசு கவலைப்படவில்லை.
துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்குவதையும் திமுக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்துகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.