ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆதியாகுடி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லாத நிலையில், தலைமை ஆசிரியர் மட்டும் பணியாற்றி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அமைந்துள்ள ஆதியாகுடி கிராம அரசு தொடக்கப்பள்ளி தற்போது மாணவர்கள் இல்லாத பள்ளியாக மாறியுள்ள சம்பவம் அப்பகுதியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள் என மொத்தம் நான்கு பேர் மட்டுமே கல்வி பயின்றனர்.
நடப்பு கல்வியாண்டு தொடங்கியதும், இரண்டு மாணவர்கள் ஆறாம் வகுப்பு படிப்பதற்காக வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். மீதமிருந்த இரண்டு மாணவிகளும் அருகிலுள்ள புளியால் அரசு தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
இதன் காரணமாக தற்போது ஆதியாகுடி அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர்கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தினமும் பள்ளியை திறந்து பராமரித்து, பின்னர் பூட்டிவிட்டு செல்லும் நிலை தொடர்கிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “மாணவர்கள் இல்லாததால் பள்ளி மூடப்படும் அபாயம் உள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சுற்றுவட்டார கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர். பள்ளி கல்வி வளர்ச்சிக்கான அடித்தளமாக இருக்கும் தொடக்கப்பள்ளிகளை பாதுகாக்கும் நோக்கில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.