சென்னை: கீர்த்தி சக்கரா விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த முதல்வர் விஜய், ரூ.48 லட்சம் நிதியுதவி வழங்கி கவுரவித்தார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம், கடந்த 2024-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது அபார வீரத்தை வெளிப்படுத்தியதற்காக நாட்டின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான ‘கீர்த்தி சக்கரா’ விருதைப் பெற்றார்.
தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த போதிலும், தனது கடமையை விடாமல் தொடர்ந்து போராடி அவர்களை வீழ்த்திய அவரது துணிச்சல் தேசிய அளவில் பாராட்டைப் பெற்றது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை நேரில் சந்தித்து பாராட்டினார். தமிழக அரசு சார்பில் ரூ.48 லட்சம் மதிப்பிலான காசோலையையும் வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது ராணுவ வீரரின் குடும்பத்தினருடன் முதல்வர் கலந்துரையாடினார். அவரது குழந்தையை மடியில் அமர வைத்து கொஞ்சி மகிழ்ந்த தருணமும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.