சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் லட்சத்தீவு பகுதிகள் வரை தென் தமிழகம் மற்றும் கேரளா வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.
06-08-2026: ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
