சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கான கணினி வழித் தேர்வு மற்றும் விரிவாக எழுதும் தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் 21 வரை, செப்டம்பர் 7 முதல் 12 வரை மற்றும் செப்டம்பர் 19 அன்று நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் தங்களது ஒருமுறை பதிவேட்டின் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் மூலம் உதவி பொறியாளர், வேளாண் விரிவாக்க அலுவலர், மருந்து ஆய்வாளர், தோட்டக்கலை அலுவலர், தொல்லியல் அலுவலர், ஜூனியர் புகைப்படக் கலைஞர் உள்ளிட்ட 45 வகையான பதவிகளில் உள்ள 508 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
