சென்னை: தமிழகத்தின் ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தமிழக ரயில்வே திட்டங்கள் மற்றும் மத்திய அரசு இதுவரை ஒதுக்கிய நிதி தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தமிழக ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு 8 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
19 புதிய ரயில்வே திட்டங்கள்
தமிழகத்திற்கு மொத்தம் 19 புதிய ரயில்வே திட்டங்களும், சுமார் 500 கிலோமீட்டர் அளவிலான புதிய ரயில் பாதைகளும் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கு மொத்தம் 4,612 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படும் நிலையில், அதில் 1,178 ஹெக்டேர், அதாவது 26 சதவீத நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மோதல் போக்கை தவிர்க்க வேண்டுகோள்
முந்தைய அரசைப் போல கண்மூடித்தனமான மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் ரயில்வே மற்றும் ஒட்டுமொத்த போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய்க்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
