புதுடெல்லி: கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் தேமுதிக பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் மனோஹர் லாலை எல்.கே.சுதீஷ் எம்.பி. நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில் கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை முன்னுரிமையுடன் பரிசீலித்து, தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொழில் மற்றும் வர்த்தகத்தின் முக்கிய மையமாக கோவை விளங்குவதால், அங்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படுவது தொழில் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தென் தமிழகத்தின் முக்கியமான வளர்ச்சி மற்றும் சுற்றுலா நகரமாக மதுரை திகழ்வதால், அங்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவது நகர்ப்புற போக்குவரத்தை எளிதாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பொதுமக்களின் பயண நேரமும் பெருமளவில் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எல்.கே.சுதீஷ் கூறுகையில், தமிழக மக்களின் அத்தியாவசிய தேவைகளை தொடர்ந்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதுடன், மாநிலத்தின் நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்திலும் மத்திய அமைச்சர்களிடமும் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்.
