சென்னை: தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பேச்சு நேரத்தை முறைப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் உறுப்பினர்கள் பேசுவதற்கு 7 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.
புதிய உறுப்பினர்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளை பேரவையில் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக முதல் கூட்டத்தொடரில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் விவாதங்களில் குறுக்கீடுகள் அதிகரித்து வருவதாகவும், உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகளைத் தவிர்த்து பேரவை நேரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் அமைச்சர் வினோத், திமுகவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் ‘சூரியனுக்கே வியர்த்தது’ எனக் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம், சூரியனை இதுவரை யாராலும் நெருங்க முடியவில்லை என பதிலடி அளித்தார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓ.எஸ்.மணியன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இயற்கை விவசாயம், விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 450-க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
விசிக உறுப்பினர் ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பணியாற்றுவதற்காக வாகன வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஆகஸ்ட் 17-ம் தேதி சட்டப்பேரவையில் விவாதிக்கலாம் என பேரவைத் தலைவர் தெரிவித்தார்.
